மதுரை: இந்து சமய பண்டிகைகளில் நவராத்திரி திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மகிஷாசுரனுடன் ஒன்பது நாள்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமியன்று அவரை வதம்செய்தார் என்பது நம்பிக்கை. இதன்படி, புரட்டாசி மாதம் 9 நாள்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10ஆவது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் நவராத்திரி திருவிழா, இம்மாதம் இன்றுமுதல் (அக்டோபர் 7) வரும் 15ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சந்நிதியின் 2ஆம் பிரகாரத்தில் அமைக்கப்படும் நவராத்திரி கொலு மண்டபத்தில், மீனாட்சியம்மன் ராஜராஜேஸ்வரி, ஊஞ்சல், கோலாட்டம், பாணபத்திரருக்கு திருமுகம் கொடுத்தல், மகிஷாசுரமர்த்தினி, சிவ பூஜை வெவ்வேறு அலங்காரங்களில், ஒன்பது நாள்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
காலையில் மூலவருக்கு அர்ச்சனை கிடையாது
இந்த உற்சவ நாள்களில் நாள்தோறும் மாலை 6 மணி முதல் மீனாட்சி அம்மன், மூலஸ்தானம் சந்நிதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகிய கல்ப பூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேஷ பூஜைகள் இரவு 8.30 மணி வரையில் நடைபெறும்.