மதுரை:உலகப்புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது நவராத்திரி திருவிழாவாகும். அம்மன் சன்னதியிலுள்ள இரண்டாம் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் கொலு அமைக்கப்படும்.
தெற்குப்புற மண்டபம் தீத்தியப்பச்செட்டி என்பவரால் கி.பி.1565-ஆம் ஆண்டு கட்டப்பட்டது என கோவில் வரலாறு கூறுகிறது. நவராத்திரி கொலு காட்சி நடைபெறுவதால் இந்தப் பிரகாரம் கொலு மண்டபம் என அழைக்கப்படுகிறது. நவராத்திரி விழாவின் போது ஒன்பது நாட்களும் அம்மனின் கொலுகாட்சி இந்த மண்டபத்தில்தான் நடைபெறும்.
நவராத்திரி விழா என்பது இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என ஒவ்வொரு சக்திக்கும் மூன்று நாட்கள் என மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும். இந்த விழா திருமலை நாயக்கர் காலத்தில் துவங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஒன்பது நாட்களும் அம்மன் பல்வேறு விதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருட்காட்சி தருவது வழக்கம்.