தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாண்பை இழந்துதவிக்கும் புல்லூத்து; அடையாளத்தைத் தொலைக்கிறதா மதுரை மாநகர்? - Nature lovers request to take action

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் கூற்றை மெய்ப்பித்து மதுரையின் அதிமுக்கிய அடையாளமாக திகழ்ந்தது புல்லூத்து. கோடையிலும் காயாமல் நீரைச் சுரந்து வற்றாத ஊற்று என்று பெயர்பெற்ற புல்லூத்தின் இன்றைய நிலையே வேறு. காரணம் என்ன, மீட்டெடுப்பது எப்படி போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடும் நோக்கில் நீள்கிறது இச்செய்தி தொகுப்பு....

pulloothu
pulloothu

By

Published : Jul 17, 2020, 3:31 PM IST

Updated : Jul 17, 2020, 4:36 PM IST

தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை பல சிறப்புகளை உள்ளடக்கிய தொன்மைவாய்ந்த நகரம். கோயில்களின் நகரம் (Temple City) என அழைக்கப்படும் இது, வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது.

பிரசித்திபெற்ற மீனாட்சி அம்மன் கோயிலால் இந்நகரம் இந்தியளவில் புகழடைந்தது. வைகை ஆறு, கலைநயமிக்க கோயில்கள், பரோட்டா, மல்லி, ஜிகர்தண்டா என தனக்கே உரிய பல சிறப்பம்சங்களைக் கொண்டு தமிழ்நாட்டில் தனித்தன்மையான நகரமாகத் திகழ்கிறது.

பண்டைய காலத்தில் மதுரை பாண்டிய நாட்டின் தலைநகரமாக விளங்கியது. இப்படி மதுரையைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அதற்கு ஒரு நாள் போதாது. அவ்வாறு நாகமலையில் இருக்கும், இயற்கை எழில் சூழந்த புல்லூத்தை விடுத்து மதுரையின் சிறப்புகள் என்ற அத்தியாயத்தை நம்மால் எழுதிவிட முடியாது.

மதுரையிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாகமலை. எட்டு கிலோமீட்டர் சுற்றளவில் விரிந்துள்ள நாகமலையின் அடிவாரத்தில் புல்லூத்து, நாகதீர்த்தம் உள்பட 21 மூலிகை சுனைநீர் ஊற்றுகள் உள்ளன. இவற்றில் முக்கியமானது, 'புல்லூத்து' எனும் 'பிள்ளை ஊற்று'.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலையின் அடிவாரத்திலிருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் சுரந்துகொண்டிருந்தது. பிள்ளை வரம் இல்லாதவர்கள் இந்த ஊற்று நீரை பருகி, அதனைச் சுற்றிவந்தால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது காலங்காலமாக நம்பப்படும் ஐதீகம். இவ்வாறு பிரசித்திபெற்ற புல்லூத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து எவருக்கும் தெரியாது.

நாவிற்குச் சுவையான தண்ணீர், அழகாக தழுவிச் செல்லும் காற்று. இவையிரண்டும்தான் புல்லூத்து மதுரை மக்களால் கொண்டாடப்படுவதற்குக் காரணம். சுற்றுலாத் தலமான புல்லூத்திற்கு தினமும் மக்கள் கூட்டம் அலைமோதும். குடும்பமாக வந்து குளித்து இயற்கையோடு இயற்கையாக உறவாடிச் சென்றனர் மக்கள்.

காய்ச்சி எடுக்கும் கோடைக்காலத்தில் கூட இங்கு தண்ணீர் கொட்டும். எப்படி கோடையிலும் தண்ணீர் சுரந்து கொண்டிருக்கிறது என்று வியப்பாய் கேட்ட மக்கள், தற்போது ஏன் தண்ணீர் சுரக்கவில்லை என்று ஏமாற்றத்துடன் வினவுகின்றனர். ஆம், வற்றாத புல்லூத்தின் தற்போதையா நிலையே வேறு.

வற்றாத ஊற்று வற்றிப் போன கோலம்

மக்களின் ஏமாற்றத்திற்குக் காரணம் என்ன?

புல்லூத்து, நாகர்தீர்த்தம், காக்கா ஊற்று அருவிகளுக்குச் சென்றுவர சரியான சாலை வசதி கிடையாது. பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும். எந்தவொரு அடிப்படை வசதிகளும் கிடையாது.

இதனைப் பயன்படுத்தி இந்த அருவி அமைந்துள்ள பகுதிகளில் சமூக விரோதச் செயல்கள் நடந்துவருகின்றன. போதை ஆசாமிகளுக்கு இயற்கை எழில் சூழ்ந்த ’நவீன பார்’ ஆக இப்பகுதிகள் மாறிவிட்டன. இதுபோன்ற செயல்களால், இப்பகுதிக்கு வர அஞ்சி சுற்றுலாப் பயணிகள் தலைதெறிக்க ஓடுகின்றனர்.

புல்லூத்தின் அருமையை உணர்ந்து பேசிய நாகமலையைச் சேர்ந்த இளைஞர்கள் (விவேக், தெய்வம், கார்த்திக்), "புல்லூத்து மதுரையின் சிறிய சுற்றுலாத் தலம் போலவே திகழ்ந்துவந்தது. பில்ட்டர் வாட்டர் (சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்) போன்று புல்லூத்து தண்ணீர் இருக்கும். குடும்பத்துடன் சென்று குளித்து சமையல் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தது எல்லாம் ஒரு காலம். அதெல்லாம் இப்போது மலையேறிவிட்டது.

ஆனால் இப்போது முழுவதும் மாசடைந்து காணப்படுகிறது. அதனைச் சுற்றி அடர்த்தியாக இருந்த மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு விட்டன. சமூக விரோதிகள் சிலர் இங்கே வந்து மதுபானம் அருந்தி, விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தக் காரணத்தால் பொதுமக்களின் வருகையும் அருகிவிட்டது" என்கின்றனர் வேதனையோடு.

வனத்துறையினர் போதுமான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால்தான் தற்போது தண்ணீர் வரத்து குறைந்து போய்விட்டது என்று விசனப்படும் அவர்கள், வார விடுமுறை நாள்களில் குடும்பம் குடும்பமாய் வருகின்ற சூழல் இப்போது முற்றிலுமாகக் குறைந்து போய்விட்டது.

புல்லூத்து நீர்ச்சுனையில் குளித்த பிறகு அருகே இருக்கும் முருகன் கோயிலில் வழிபடுவதற்கு என்றே மதுரையைச் சுற்றி பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் வந்து செல்வார்கள். முறையான பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாததால் அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு மரத்து விட்டது.

இந்த புல்லூத்துக்கு என்னதான் ஆயிற்று?

இது ஒருபுறமிருக்க புல்லூத்தில் நீர்வரத்து குறைந்ததற்கும், மரங்களின் அடர்த்தி குறுகியதற்கும் பல்வேறு காரணங்களை அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டாய் முன்வைக்கிறார்கள். பல்வேறு மூலிகைகளின் வேர்களிலிருந்து ஊறிவருகின்ற இந்தத் தண்ணீர் உடலின் உபாதைகளுக்கு மருந்தாக இருந்துள்ளது என்றும் ஆச்சரியப்படுத்துகின்றனர். ஆனால், இடைக்காலத்தில் என்னதான் ஆயிற்று இந்தப் புல்லூத்துக்கு... விளக்குகிறார்நீரியல் ஆய்வாளர் ஜோ. கனகவல்லி.

"மதுரையின் வைகை, கிருதுமால் நதிகளின் நீர் ஆதாரங்களில் முக்கியமான ஒன்று இந்த புல்லூத்து. புற்களிலிருந்து கசிந்த நீர் என்ற அடிப்படையில், இதற்குப் புல்லூத்து என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவக் குணங்கள் நிறைந்த தண்ணீராக இது திகழ்ந்துள்ளது. ஆகையால், அதை கங்கைக்கு இணையான புனித நீராகவே மக்கள் பாவித்துவந்துள்ளனர். புல்லூத்தில் நீர்வரத்துக் குறைந்ததற்கு மிக முக்கியக் காரணம், தற்போது அதைச் சுற்றி முளைத்துள்ள தண்ணீர் கம்பெனிகள்தான்" என்று அதிரவைக்கிறார் கனகவல்லி.

தொடர்ந்து பேசிய அவர், "ஆம், அந்நிறுவனங்கள் ராட்சத கிணறுகள் மூலமாக பூமியைத் துளையிட்டு வரைமுறையின்றி தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இது ஒருபுறமென்றால் நாகமலையின் அடிவாரத்திலுள்ள பல்வேறு பகுதிகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு, கிணறுகள் மூலமாக ஆண்டு முழுவதும் இங்கே பாசனம் செய்யப்படுகிறது.

இதனால் பூமிக்கு மேலே இருந்த நிலத்தடி நீர்மட்டம், தற்போது வெகு ஆழத்திற்குச் சென்றுவிட்டது. அடுத்ததாக அப்பகுதியில் இருந்த பல நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுவிட்டன. இதனால்தான் வற்றாத புல்லூத்து தற்போது காய்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது" என்றார் மிகுந்த வேதனையோடு.

சங்க இலக்கியங்களில் நாகமலை பற்றிய குறிப்புகள் காணப்படுவதுடன், இதனைச் சுற்றி வாழ்ந்த மக்கள் யானைகளை முரசறைந்து விரட்டியதாகக்கூட எழுதப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் ராஜபாட்டை நடத்திய நாகமலை, இன்று மனிதர்களின் தவறுகளால் அதன் மாண்பை இழந்துவருகிறது. இயற்கையைப் பேணிப் பாதுகாக்கும் உணர்வும், நீராதாரங்களைப் புனிதமாகக் கருதும் வாழ்வியலும்தான் புல்லூத்தை மீண்டும் மீட்டெடுக்கும். இந்தப் புனரமைப்பில் அனைவருக்குமே பங்கு உண்டு என்பதை உணர்வதுதான் காலத்தின் கட்டாயம்.

இதையும் படிங்க:'நகரா டாக்சிகள்.. வாழ்விழந்த டிரைவர்கள்'- கண்டுகொள்ளுமா அரசு!

Last Updated : Jul 17, 2020, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details