மதுரை:தகவல் பரிமாற்றம் என்பது பண்டைய காலந்தொட்டு உலக மனிதர்களிடையே தவிர்க்க முடியாத சேவையாக இருந்து வருகிறது. ஓரிடத்தில் முரசு கொட்டியோ அல்லது பறை இசைத்தோ அரசாங்கத்தின் தகவல்களைத் தெரிவிப்பது மட்டுமன்றி, ஓரிடத்திலிருந்து தொலைவிலுள்ள மற்றொரு இடத்திற்கு தகவல்களைக் கொண்டு செல்ல, 'ஓட்ட தூதுவர்களை' பயன்படுத்தியது வரை இதன் வரலாறு மிக நீண்ட நெடியதாகும்.
இந்தியாவின் அஞ்சல் வரலாற்றை சிந்து சமவெளியிலிருந்து தொடங்கிய தொன்மைக் காலம், முகலாய மன்னர்கள் ஆட்சியின் போது தொடங்கிய இடைப்பட்ட காலம், ஆங்கிலேய ஆட்சியின் போது தொடங்கிய நவீன காலம் என மூன்றாகப் பிரிக்கலாம். ஆங்கிலேயருக்குப் பிறகு இந்திய அஞ்சல் துறை நவீனத்துடன் பல்வேறு மாற்றங்களைக் காணத்தொடங்கியது. மன்னர்கள் காலத்தில், தகவல்களைக் கொண்டு சென்றவர்கள் 'தகவலாளி', 'ஓட்டக்காரன்' அல்லது 'ஓட்டத் தூதுவன்' என அழைக்கப்பட்டனர்.
அஞ்சல் ஊழியர்களை பெருமைபடுத்திய 'ஹர்ஹரா' திரைப்படம்: கடிதங்கள் அடங்கிய சாக்குப் பைகளைக் தூக்கிக் கொண்டு ஓட்டமும், நடையுமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தனர். அச்சமயம் விலங்குகளாலோ, கள்வர்களாலோ அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர்களின் பாதுகாப்புக்காக கையில் வேல் ஏந்திச்சென்றனர். அண்மையில் வெளியான 'ஹர்ஹரா' என்ற தமிழ்ப்படத்தில் ஓட்டக்காரர்களையும், தபால்காரர்களையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். புறாக்களின் கால்களில் ஓலைகளைக் கட்டி தூது அனுப்பிய வரலாறும் உண்டு.
கிராமங்களில் அதிரும் அஞ்சல் சேவை:உலகிலுள்ள பிற நாடுகளின் அஞ்சல் சேவைகளைக் காட்டிலும் மிகப் பெரிய வலை தொடர்பைக் கொண்டதுதான், இந்திய அஞ்சல் துறை. நாடு முழுவதும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 251 அஞ்சல் அலுவலகங்கள் உள்ளது. அவற்றில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 985-மும், நகர்ப்புறங்களில் 15 ஆயிரத்து 299- அஞ்சல் அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும் 808 தலைமை அஞ்சல் அலுவலகங்களும், 24 ஆயிரத்து 302 துணை அஞ்சல் நிலையங்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 141-கிளை அஞ்சல் அலுவலகங்கள் நாடு முழுவதும் இயங்குகின்றன.
வரலாற்று சிறப்பு பெற்ற அஞ்சல் துறை: இந்திய அஞ்சல் சேவை என்பது அதிகாரப்பூர்வமற்ற வகையில், கடந்த 4 நூற்றாண்டுகளுக்கு முன்பு 1727-இல் துவங்கியது. முதன் முதலாக கொல்கத்தாவில் ஆங்கிலேயர் காலத்தில் 1774ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் 1786-லும், மும்பையில் 1793-ஆம் ஆண்டும் அஞ்சல் சேவைகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் அஞ்சல் சேவையில் சீரான தன்மையைக் கொண்டு வரும் பொருட்டு, 1837-ஆம் ஆண்டு 'இந்திய அஞ்சல் சட்டம்' இயற்றப்பட்டது. மேலும் இந்த சட்டத்தை விரிவுபடுத்தி தற்போதைய நவீன அஞ்சல் சேவைக்கு வித்திடும் வகையில், 1854-ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டது.
இதற்கிடையே 1854-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி ரயில்வே அஞ்சல் துவங்கப்பட்டது. அதே ஆண்டில் கப்பல் அஞ்சல் சேவை முதன் முதலாக 1859ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து போர்ட் பிளேர் வரை துவங்கப்பட்டது. அதன் பிறகு பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் கப்பல் மூலமாக அஞ்சல் சேவை நடைபெறத் தொடங்கின. பிப்ரவரி 18, 1911 அன்று உலகின் முதல் ஏர்மெயில் விமானம் கங்கை ஆற்றின் குறுக்கே 18 கி.மீ. தூரம் பயணித்து அலகாபாத்தில் இருந்து நைனிக்குச் சென்றது. 1898-ஆம் ஆண்டு பல புதிய சீர்திருத்தங்களோடு இந்திய அஞ்சல் சட்டம் அறிமுகமானது. இதைத் தொடர்ந்தே உலகம் முழுவதும் நூறு நாடுகளில் இந்திய அஞ்சல் துறை தனது சேவைகளை விரிவுபடுத்தியது.
சராசரியாக 8 ஆயிரத்து 627 பேருக்கு ஒரு அஞ்சல் நிலையமும், ஊரகப் பகுதிகளில் சராசரியாக 6 ஆயிரத்து 229 பேருக்கும், நகர்ப்புறங்களில் சராசரியாக 31 ஆயிரத்து 242 பேருக்கும் அஞ்சல் நிலையங்கள் சேவை புரிந்து வருகின்றன. ஒவ்வொரு அஞ்சல் நிலையங்களும் சராசரியாக 20.54 சதுர கி.மீ-ல் தங்களது சேவையை செய்து வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 17 ஆயிரத்து 890 அஞ்சல் நிலையங்களும், மகாராஷ்டிரத்தில் 13 ஆயிரத்து 688 அஞ்சல் நிலையங்களும், தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 865 அஞ்சல் நிலையங்களைக் கொண்டு, இந்தியாவில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரிவு அஞ்சல் துறையில் மொத்தம் 4 லட்சத்து 3 ஆயிரத்து 678 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 16.39% பட்டியல் சாதியினராகவும், 7.58% பட்டியல் பழங்குடியினத்தவராகவும் உள்ளனர். 32 ஆயிரத்து 328 பெண்கள் அஞ்சல் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர்.
சிண்டே டாக்ஸ் அஞ்சலின் அறிமுகம்: 1852-ஆம் ஆண்டு ஆசியாவிலேயே முதன்முதலில் ஒட்டக்கூடிய அஞ்சல்தலை சிந்து (சிண்டே) மாகாணத்தில் வெளியிடப்பட்டது. இவையே பின்னர் 'சிண்டே டாக்ஸ்' என்று அழைக்கப்பட்டன. சிண்டே டாக்ஸ் அஞ்சல் அறிமுகப்படுத்தப்பட்ட நாளான அக்டோபர் 10-ஆம் தேதி, 'தேசிய அஞ்சல் தினமாக' 1854-ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயரால் 1901-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல், 1 பென்னி மதிப்பில் அஞ்சல் தலை அஞ்சலகங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நாடு விடுதலையடைந்த பின்னர், 1947-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி இந்திய தேசியக் கொடியைக் கொண்ட முதல் அஞ்சல் தலை வெளியானது.
இந்த முத்திரைகள் ஜூன் 1866-ஆம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தன. நாடு முழுவதும் செல்லுபடியாகும் முதல் தபால்தலை 1854-ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போதிருந்து, நாட்டின் தொலைதூர கிராமங்களை இணைப்பதன் மூலம் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் அஞ்சல் துறை தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. இதுகுறித்து மதுரை தபால் தலை மற்றும் நாணயம் சேகரிப்போர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் துரை விஜயபாண்டியன் கூறுகையில், "நமது இந்திய அஞ்சல் துறை நம் வாழ்வியலோடு ஒன்றிணைந்து அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, தொழில் முறைகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக முக்கிய பங்காற்றுகின்றது.
மேலும் நம் நாட்டின் தொழில் சார்ந்த எண்ணங்களை உலக நாடுகளிடம் எடுத்துச் சொல்வதோடு மட்டுமன்றி, அதன் மூலம் நம் நாட்டிற்கு பொருளாதார ஏற்றங்களையும், நம் நாட்டின் நிலைப்பாட்டினை உயர்த்தும் வகையிலும் சிறப்பாகச் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கும் பங்காற்றுகிறது. மேலும் நம் நாட்டின் அஞ்சல்துறை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒவ்வொரு விதமான அஞ்சல் தலைகளையும், சிறப்பு அஞ்சல் உறைகளையும், அஞ்சல் அட்டைகளையும் வெளியிட்டு இந்தியாவின் கலாச்சார, பண்பாட்டுப் பெருமைகளை உலக நாடுகள் அறியச் செய்வதிலும் அரிய சேவையைச் செய்கிறது.
வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பெருமையைப் பகிர்வதற்கு அஞ்சல்துறை வெளியிட்ட அஞ்சல் தலைகள் மிகச் சிறப்பு வாய்ந்தன. நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் அஞ்சல் தலைகளும், உறைகளும், அட்டைகளும் மதிப்பு மிக்கவை. இதில் கூடுதல் செய்தி என்னவென்றால், உலக அளவில் அதிக அஞ்சல் தலைகளில் இடம் பெற்ற ஒரே தலைவர் நமது மகாத்மா காந்திதான்" என்கிறார் துரை விஜயபாண்டியன்.
இந்திய அஞ்சல் துறையின் மதிப்புமிக்க சேவை: இந்திய அஞ்சல் துறை பரிமாற்றம், அஞ்சல் விநியோகம் மற்றும் பணம் அனுப்புதல் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டிருந்தாலும், வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகளை உள்ளடக்கிய சேவைகளையும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மேற்கொண்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பிப்ரவரி 2, 2006 அன்று தொடங்கப்பட்டதில் இருந்து, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், நாட்டின் தொலைதூர கிராமங்கள் மற்றும் அணுக முடியாத சிற்றூர்களிலும் கூட அஞ்சல் துறை தனது சேவைகளை வழங்கி வருகிறது.