மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறை பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றிவரும் முனைவர் நாகரத்தினம், புதுமையான, பாரம்பரிய நுட்பங்கள் வழியாக மிகச் சிறந்த பணி செய்ததன் காரணமாக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். விருதுடன் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 2 லட்சத்திற்கான பரிசுத்தொகையும் அவருக்கு வழங்கப்பட்டது.
காமராஜர் பல்கலை. பேராசிரியருக்கு தேசிய விருது வழங்கிய குடியரசுத் தலைவர் - ராம்நாத் கோவிந்த்
மதுரை: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் நாகரத்தினத்துக்கு 2019ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் தகவல் தொடர்புக்கான தேசிய விருது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் வழங்கப்பட்டது.
இவ்விருதினை டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த தேசிய அறிவியல் தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி சிறப்பித்தார்.
இதுகுறித்து இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சூழல் இடங்களை ஓர் ஊடகமாக கருதி புதுமை மற்றும் பாரம்பரிய நுட்பங்கள் வழியாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பொதுமக்களிடம் இணைத்திருக்கிறார். நீர்நிலைகள், ஆறுகள், கண்மாய்கள், குளங்கள் மற்றும் சூழல் தலங்களுக்குப் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை பரவலாக்கியிருக்கிறார். இம்முயற்சிகளில் அவர் இந்திய அளவில் நிபுணர்கள், குழுவினர் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்துள்ளார். பல துறைகள் சார்ந்த கருத்துக்களை மக்கள் பேராசிரியராக களத்தில் பல்வேறு உத்திகளுடன் மக்கள் குழுவினர் மத்தியில் சென்று சேர்த்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தேசிய விருதைப் பெற்றமைக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் மு. கிருஷ்ணன், நாகரத்தினத்துக்கு பாராட்டு தெரிவித்தார்.