திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"என் மீது மோசடி வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி திண்டுக்கல் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சபாபதி என்ற தனிநபர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் 2014இல் நடைபெற்ற மக்களவை தேர்தல் செலவுக்காக அவரிடம் நான்கு கோடியே 97 லட்சத்து 90 ஆயிரத்து 700 ரூபாய் வாங்கியதாகவும், அதில் இரண்டு கோடியை திரும்ப வழங்கியதாகவும், மீதிப்பணத்தை வழங்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் சபாபதி கூறியுள்ளார்.
இதே கோரிக்கைக்காக சபாபதி ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியானது. இதை மறைத்து மீண்டும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவர் தனிநபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதனால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.