மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தமிழ்நாடு 1,076 கி.மீ. தொலைவிற்கு 2ஆவது நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. இங்கு மட்டும் 4 கடல் வாழ் பல்லுயிர் காப்பகம் அமைந்துள்ளது. கடற்பரப்பில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடல் வளம் பாதிக்கிறது. கடற்பரப்பில் ஏற்படும் எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்கள், இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன.
கடந்த 2ஆம் தேதி நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி மாவட்டங்களிலுள்ள கடற்பரப்பில் எண்ணெய் குழாய்களில் கசிவு ஏற்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. குறிப்பாக பட்டிணம்சேரி மீனவ கிராமம் பெரும்பாலும் பாதித்துள்ளது. எனவே, நிபுணர் குழு அமைத்து பட்டிணம்சேரி மீனவ கிராமத்தை ஆய்வு செய்து பாதிப்பின் அளவை மதிப்பீடு செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இடைக்கால நிவாரணமும், சேதமடைந்த சுற்றுச்சூழலை சரி செய்யவும், பட்டினச்சேரி கடற்பரப்பின் மீது 9 கி.மீ. தொலைவிற்கு உள்ள ஆயில் பைப் லைன் செயல்பாடுகளை நிறுத்தவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.