மதுரை: நூறாண்டுகளுக்கு மேல் பழமையும் பெருமையும் மிக்க மதுரை விக்டோரியா எட்வர்ட் மன்றம் பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட பொது நிறுவனம் ஆகும். இந்த அமைப்பு நிர்வாகம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநபர் ஒருவரின் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இங்கு நிதி முறைகேடுகளும் நிர்வாக சீர்கேடுகளும் நடைபெற்றுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த மன்றம் தொடர்பான வழக்கு ஒன்றில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி மன்றத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே மேற்கொள்ள மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தனி அலுவலராக பத்திரப்பதிவு அலுவலர் ரவீந்திரநாத்தை நியமனம் செய்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்டோரியா எட்வர்ட் மன்றத்திற்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் தனி அலுவலர் ரவீந்தரநாத் நேற்று மன்றத்திற்கு சென்றபோது மன்ற செயலாளர் இஸ்மாயில் இரும்பு சங்கிலியால் பூட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியினர், மன்றத்திற்கு பூட்டு போடுவதாக அறிவித்து போராட்டம் நடத்தினர். கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் கூறுகையில், "மதுரையின் மிக பாரம்பரியமும் பழமையும் மிக்க விக்டோரியா ஏட்வர்ட் மன்றம் இஸ்மாயில் என்ற தனிநபரின் கையில் சிக்கி பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை சந்தித்து வருகிறது.
தனி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட பதிவாளரை உள்ளே நுழைய விடாமல் மன்றத்தை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்த சட்ட மீறலை கேள்வி கேட்காமல் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மேல் பல்வேறு வழக்குகள் தற்போதும் உள்ளன. பொதுமக்கள் அனைவரும் வந்து செல்லக்கூடிய பொது இடத்தை தனது சொத்தாக எண்ணிக் கொண்டு பெரும் முறைகேடுகளை செய்து கொண்டிருக்கிறார்.
நீதியை நிலைநாட்டுவதற்கு கூட இங்கு போராட்டம் நடத்த வேண்டி உள்ளது. சட்டப்படி பொறுப்பேற்றுக் கொண்ட தனி அலுவலரை பணி செய்ய விடாமல் பூட்டு போட்ட விக்டோரியா எட்வர்ட் மன்ற செயலாளர் இஸ்மாயிலை காவல்துறை உடனடியாக கைது செய்து நடவடிக்கை டுக்க வேண்டும்" என்றார்.