சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம் இயற்கை வளப்பாதுகாப்பு, கூடங்குளம் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப்பிரச்னைகளுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டவர். இவர், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக சென்னையில் கடந்த பிப். 15ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதன் பின்னர் அவர் காணமால் போனார். அது குறித்து சிபிசிஐடி காவலர்கள் விசாரித்து வந்தநிலையில், திருப்பதி ரயில் நிலையத்தில் கடந்த ஜுலை 6ஆம் தேதி முகிலன் கைது செய்யப்பட்டார். இதனிடையே குளித்தலையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை முகிலன் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சிபிசிஐடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
தற்போது திருச்சி மத்திய சிறையலிருக்கும் அவர் பாலியல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து ஜாமின் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு பாலியல் குற்றச்சாட்டுப் புகாரளித்த ராஜேஸ்வரி தரப்பில் முகிலனுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று இடைக்கால மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சுபஸ்ரீ வழக்கு: அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு நிபந்தனை ஜாமின்!