தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஐடி இடஒதுக்கீடு: ராம்கோபால் ராவ் குழு அறிக்கையை நிராகரிக்குமாறு சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை

ஐஐடி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு குறித்த ராம் கோபால் ராவ் குழுவின் அறிக்கையை ஒன்றிய அரசு நிராகரிப்பதுடன், அங்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற உறுதி செய்ய வேண்டும் எனவும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

By

Published : Aug 6, 2021, 11:39 AM IST

இதுகுறித்து இன்று (ஆக.06) அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஐஐடி இட ஒதுக்கீடு மீறல்கள் குறித்த பிரச்சினைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

இட ஒதுக்கீட்டின் முறையான அமலாக்கம் பற்றி பரிசீலிப்பதற்காக டெல்லி ஐஐடி இயக்குநர் ராம் கோபால ராவ் தலைமையில் போடப்பட்ட நிபுணர் குழு "ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடலாம். முனைவர் பட்ட அனுமதியில் கட்டாயமானதாக இருக்க வேண்டியதில்லை. மாணவர் அனுமதியில் நன்றாகவே அமலாகிறது" என்ற வகையில் அறிக்கையை தந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்பிரச்னை குறித்து தொடர்ந்து கடிதங்களையும், நாடாளுமன்றத்தில் கேள்விகளையும் எழுப்பி வருகிறேன். மார்ச் 8, 2021இல் நான் எழுதிய கடிதத்தில் ராம் கோபால் ராவ் குழு தனக்கு இட்ட பணியை செய்யாமல் வரம்பு மீறி எதிர்மாறான வேலைகளை செய்திருக்கிறது. ஆகவே உடனடியாக அந்த அறிக்கையை நிராகரித்து இட ஒதுக்கீட்டு அமலாக்கத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி இருந்தேன்.

அந்த நிபுணர் குழு அறிக்கையை ஐஐடி நிலைக் குழு பரிசீலிப்பதாக முதலில் பதில் வந்தது. ஐஐடி நிலைக் குழுவும் தனது எல்லைகளை மீறிவிடக் கூடாது என்று அறிவுறுத்துமாறு வலியுறுத்தி இருந்தேன். அதற்கான ஆகஸ்ட் 2ஆம் தேதியிட்ட பதில் கடிதம் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் இருந்து வந்துள்ளது.

அதற்கு, ஐஐடி நிலைக் குழுவிற்கு எனது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும், அக்கடிதத்தில் இடம் பெற்றுள்ள கருத்துகளை கவனத்தில் எடுத்திருப்பதாகவும், நிலைக் குழுவும் தனது பரிந்துரைகளை இறுதி செய்து அனுப்பும்போது இக்கருத்துகளை கணக்கில் கொள்ளுமென்றும் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஏற்கெனவே உள்ளது. அதன் அமலாக்கம் மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும். இந்தக் கல்வியாண்டும் கடந்து போய்விடக் கூடாது. சமூக நீதி உறுதி செய்யப்பட வேண்டும். ஓபிசி , எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான சட்ட ரீதியிலான உரிமைகள் கைவசமாக வேண்டும். ஆசிரியர் நியமனம், மாணவர் அனுமதி இரண்டிலுமே" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'கரோனா காலத்தில் 790 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்' - மகாராஷ்டிரா அரசு தகவல்

ABOUT THE AUTHOR

...view details