மதுரை: மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்திய பட்டய கணக்கறிஞர்கள் கழகத்தினர் (Institute of Cost Accountants of India) தேர்வு அறிவிக்கையின் 13ஆவது அம்சத்தில், இந்தி வழி தேர்வர்களுக்கு மட்டும் எழுத்து பூர்வமான விடைத்தாள் இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு இந்தி வழி தேர்வர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் என அழுத்தமாக கூறப்பட்டு இருந்தது. தட்டச்சு வாயிலாகவே பதில்களை அளிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால், ஆங்கில வழி தேர்வர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். தட்டச்சு செய்ய நேரம் எடுக்கலாம் என்பதால் அது மதிப்பெண்களை குறைக்கும் என அச்சமடைந்தனர்.
இது குறித்து நான் ஐசிஏஐ தலைவருக்கு கடந்த டிசம்பர் 27ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தேன். தற்போது இதற்கு ஐசிஏஐ தலைவர் பி.ராஜு ஐயரிடமிருந்து ஜன.3ஆம் தேதி பதில் வந்துள்ளது. கடிதத்தின் படி ஆங்கில வழி தேர்வர்களும் பிரிவுகள் பி, சி, டி ஆகிய கேள்விகளுக்கான பதில்களை தட்டச்சு வாயிலாகவோ, எழுத்து பூர்வமாகவோ தர இயலும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கையின் விதிமுறை எண் 13இல் இருந்த குழப்பத்திற்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் எல்லா தேர்வு மையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு தேர்வர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் என நம்புகிறேன்.
ஐசிஏஐ தலைவரின் விளக்கக் கடிதம் இந்தி அல்லாத மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திமுக ஆட்சி மக்களுக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளது - எடப்பாடி பழனிசாமி