தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டு ரயில்களில் முன்பதிவில்லா பொது பெட்டிகள் இணைப்பு - எம்.பி சு வெங்கடேசன் கோரிக்கை! - madurai latest news

முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளை தமிழ்நாட்டுக்குள் ஓடும் விரைவு ரயில்களிலும் இணைக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரயில்
ரயில்

By

Published : Oct 27, 2021, 9:42 AM IST

மதுரை:ரயில்களில் முன்பதிவில்லாத பொது பெட்டிகள் இணைக்கப்பட்டதற்காக ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்து மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சிறப்பு விரைவு ரயில் வண்டிகளில் முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கை ஏற்கப்பட்டதற்கு ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டுக்குள் ஓடும் விரைவு வண்டிகளிலும் பொதுப் பெட்டிகளை விரைந்து இணைத்திட கோருகிறேன்!

சிறப்பு விரைவு ரயில்களில் பொது பெட்டிகள் இணைப்பு?

இப்போது இந்தியா முழுவதற்கும் ரயில்வே மண்டலங்களுக்குள் ஓடும் விரைவு ரயில்களில் மட்டும் பொது பெட்டிகளை இணைத்திட முடிவெடுத்துள்ளது. முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வழங்க கவுண்டர்களை திறக்கவும் உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி முதல் கேரளா - தமிழ்நாட்டுக்கு செல்லும் 23 விரைவு ரயில்களில் உள்ள இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகள் சிலவற்றை, பொது பெட்டிகளாக மாற்ற ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. அதே போல நவம்பர் 10ஆம் தேதி முதல், நான்கு விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளை, பொதுப் பெட்டிகளாக மாற்றி ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதனை வரவேற்கும் அதே நேரத்தில், தமிழ்நாட்டுக்குள் ஓடும் சிறப்பு விரைவு வண்டிகளிலும் உடனடியாக பொது பெட்டிகளை இணைத்திடவும். அத்துடன் ரயில்வே மண்டலங்களை தாண்டி, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற ஊர்களுக்கு செல்லும் சிறப்பு விரைவு வண்டிகளிலும் பொது பெட்டிகளை இணைத்திட விரைந்து முடிவெடுக்க வேண்டும்.

அதேபோல் பொது பெட்டிகளை விரைவு வண்டிகளில் இணைத்திட முடிவெடுத்த இதே சமயத்தில், புறநகர வண்டிகளையும் இயல்பு நிலைக்கு இயக்கிட வேண்டும். முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட விரைவு ரயில் வண்டிகளை இயக்குவது போல, சாதாரண பயணி வண்டிகளையும் இயக்கிட மீண்டும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’பெண் குழந்தைகளுக்கு சுயமாக வாழக் கற்றுகொடுப்பதே பெற்றோரின் கடமை’ - கனிமொழி எம்பி

ABOUT THE AUTHOR

...view details