தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் விதிகளை மீறி இந்தியில் கடிதம் அனுப்பும் அமைச்சகங்கள்- எம்பி கண்டனம்

சட்டவிதிகளை மீறி மத்திய கலாச்சார அமைச்சகம் எம்பி சு. வெங்கடேசனுக்கு இந்தியில் கடிதம் அனுப்பியுள்ளதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

MP Su. Venkatesan condemned Ministries sending letters in Hindi in violation of the rules
MP Su. Venkatesan condemned Ministries sending letters in Hindi in violation of the rules

By

Published : Feb 28, 2021, 6:03 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "19 - 3/ 2020 எண்ணிட்ட கடிதம் ஒன்றை கலாச்சார அமைச்சகத்திடமிருந்து பெற்றுள்ளேன். அது இந்தியில் உள்ளது. நல்வாய்ப்பாக எனக்கு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணையாவது புரிந்துகொள்ள முடிந்தது. அக்கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ள ஆங்கில படிவத்தின் வாயிலாக அக்கடிதம் காந்தி சமாதான விருதுக்கான பரிந்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கேட்டிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.

தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தொடர்புகள் இந்தியில் அமையக் கூடாது. அவ்வாறு அமைவது அலுவல் மொழிச் சட்டத்திற்கும், அரசு பல்வேறு தேதிகளில் வெளியிட்டுள்ள ஆணைகளுக்கும் புறம்பானது என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளேன். இப்பிரச்சினையில் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையைக் கூட அணுகினேன். அவ்வழக்கில் மத்திய அரசு வருத்தத்தை தெரிவித்து, இனி தகவல் தொடர்புகள் ஆங்கிலத்தில் அமையும் என்ற உறுதி மொழியையும் அளித்தது.

மத்திய அரசின் இத்தகைய அணுகுமுறை திட்டமிடப்பட்டதோ என்று எனக்கு ஐயம் எழுகிறது. சமஸ்கிருதத்தையும், இந்தியையும் இந்தி பேசாத மாநிலங்கள் குறிப்பாக தமிழக மக்கள் மீது திணிப்பதற்கான விரிந்த திட்டத்தின் பகுதி இது என்றும் தோன்றுகின்றது.

இப்படியே தொடர்ந்து செய்தால் இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் களைத்துப் போய் எதிர்க்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்கக் கூடும். ஆனால் தமிழ்நாடு இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராக உறுதியாகப் போராடிய, பல தியாகங்களையும் புரிந்த தனித்துவம் மிக்க வரலாறைக் கொண்டது. ஆகவே நாங்கள் களைத்துப் போய் விட மாட்டோம். எங்கள் அடையாளத்தை பெருமை மிகு கலாச்சாரத்தை பலவீனமுறச் செய்யும் நடவடிக்கைகளை உறுதியாக எதிர்த்து முறியடிப்போம்.

அமைச்சக அலுவலர்கள் இந்நாட்டின் சட்டத்தை மீறியிருக்கிறார்கள். அரசாங்கம் நீதிமன்றத்தின் முன்பு அளித்த உறுதி மொழியை மீறியிருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பு. ஆகவே இந்திக் கடிதத்தை அமைச்சகத்திற்கே திருப்பி அனுப்புகிறேன். கலாச்சார அமைச்சகம் எதிர் காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என அலுவலர்களுக்கு அறிவுறுத்தவேண்டும்" எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details