மதுரை:இந்தியன் வங்கியில் கருவுற்ற பெண்களுக்கு பணி நியமனம் மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவ்வங்கியின் தலைவர் சாந்தி லால் ஜெயினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், 'இந்தியன் வங்கி அண்மையில் புதிய பணி நியமனம் பெறுபவர்களின் உடல் நலத் தகுதி பற்றி வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள் பாலின பாரபட்சத்தோடு அமைந்துள்ளது. அதன் வழி காட்டல் கூறுவது இதுதான்.
'பெண் தேர்வர் மருத்துவப் பரிசோதனையின் போது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தை கடந்திருப்பது தெரிய வரும்பட்சத்தில், பிரசவத்திற்கு பிந்தைய ஓய்வு காலம் வரையிலும், அவர் பணி நியமனம் பெற தற்காலிகமாக தகுதி அற்றவர் என்று கருதப்படுவார். பிரசவம் முடிந்து 6 வாரம் நிறைவு பெற்ற பின்னர், பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் இருந்து உடல் நலத்தகுதி பெற்று சமர்ப்பிக்கப்பட்டால், அவர் மறு மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உடல் நலத்தகுதி உறுதி செய்யப்பட வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பாலின பாரபட்ச நடைமுறை.
அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 14, 15, 16 ஆகியவற்றுக்கு விரோதமானது. சட்டத்தின் முன் எல்லோரும் சமம், எந்த குடிமக்களும் பாலினம் உள்ளிட்ட எந்த காரணங்களாலும் பாரபட்சத்திற்கு ஆளாகக்கூடாது, வேலை வாய்ப்பில் பணி நியமனங்களில் எல்லா குடி மக்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும், எந்த வேலை வாய்ப்புகளிலும் பாலின பாரபட்சம் உள்ளிட்ட வேறுபாடுகள் காண்பிக்கப்படக் கூடாது என்று அரசியல் சாசனத்தின் பிரிவுகள் மிகத்தெளிவாக கூறுகின்றன. பொதுத்துறை வங்கிகள் அரசுக்கு உடமையானவை. "முன் மாதிரி பணியமர்த்துபவர்கள்" (Model Employer) ஆக இருக்க வேண்டும்.