சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தபோது, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, முன்னாள் முதலமைச்சர் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தனர். அவர்களை இன்று வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. அங்குள்ள பள்ளிகளையும் சந்தைகளையும் செயல்படவிடாமல் அவசரநிலையை காஷ்மீரில் கொண்டுவந்தது போல, இந்தியாவில் மற்ற பகுதிகளிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுவருகிறது.
பிரதமருக்கு கடிதம் எழுதிய கலைத் துறையினர் மீது தற்போது தேச விரோத சட்டம் பாய்ந்திருக்கிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தை விமர்சித்தால் அவர்கள் மீதும் பொய் வழக்குகள் பதிவு செய்து விசாரணை என்கிற பெயரில் நீண்ட நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கின்றனர்.
அதுபோன்றுதான் ப. சிதம்பரத்தின் மீது 2017ஆம் ஆண்டு போடப்பட்ட வழக்கிற்காக விசாரணை என்று கூறி நீண்ட நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து அவருடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர். ப. சிதம்பரம் மட்டுமில்லாமல் இந்த அரசை காத்திரமாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சரத் பவார், சசிதரூர் ஆகியோர் மீதும் மத்திய அரசு வழக்குத் தொடுத்திருக்கிறது.
இந்தியச் சட்டத்தில் ஒரு வழக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அவ்வழக்கை விசாரிக்கலாம். அதனைப் பயன்படுத்திதான் அரசை விமர்சிப்பவர்களை நீதிமன்ற காவலில் வைக்க பாஜக அரசு முயற்சித்துவருகிறது.
இவையனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு நாள் பாஜகவின் ஜனநாயக விரோதப்போக்கிற்கு எதிராக மக்கள் பொங்கி எழுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க:பண்டிகை கால சலுகைகளை வாரிவழங்கியுள்ள பிஎஸ்என்எல்!