விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சந்தானம், சபரிமலை ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தனித்தனியே மனு தாக்கல்செய்தனர்.
அதில், "ராஜபாளையம் தாலுகா திருப்பணிமலையில் உள்ள கல்குவாரியில் கற்களை வெடிமருந்துகள் வைத்து வெட்டுகின்றனர். இதனால் அங்கு சுற்றியுள்ள வேளாண் நிலமும், கூலித் தொழிலாளர்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
நீர்நிலைகளும், மக்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்திவந்த நடைபாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
குவாரியை மூட ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே குவாரி உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும். குவாரி செயல்படத் தடைவிதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது, குவாரி உரிமம் என்ற பெயரில் பல்வேறு மலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மலைகள், மலைக்குன்றுகள், காடுகள், ஆறுகள் ஆகியன இயற்கையின் கொடை. இவற்றை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சுனாமி வந்தபோது மாங்குரோவ் காடுகள் இயற்கை அரணாக இருந்ததுபோல மலைகள்தான் கிராமங்களின் பாதுகாப்பு அரணாக உள்ளது என்றும் தெரிவித்தார்.