மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை மேலவெளி வீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் பரவை காய்கறிச் சந்தையில் லோடுமேன் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகை செல்வி (25), இவர்களது பிள்ளைகள் கவிதர்ஷினி (3), தங்கேஸ்வரன் (2).
அடிக்கடி கணவன், மனைவியிடையே தகராறு ஏற்படுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கார்த்திகை செல்வி திருமண நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்ல கணவரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு வேல்முருகன் பணம் தராததால் இருவருக்கிடையுமே தகராறு முற்றியுள்ளது. இதனால் விரக்தியடைந்த கார்த்திகை செல்வி வீட்டில் ஓர் அறையில் தனது இரு குழந்தைகளுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதில் அலறியடித்த இரு குழந்தைகளும், தாயும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வீட்டிலிருந்து புகை வெளியேறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து சமயநல்லூர் காவல் நிலைய காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது மூவரும் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தனர்.
உடல்களை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சத்திரிய நாடார் உறவின்முறையுடன் பிரச்னை: ஆசிரியை தற்கொலை முயற்சி