மதுரை: ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த சூழல் அமைப்பு, எதிர்காலத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் விமான நிலையத்தைப் போன்ற வசதிகளை வழங்குவதற்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணிகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 2022இல் மறுசீரமைப்பு பணிக்கான டெண்டர் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளில் நடந்து முடிந்தது மற்றும் நடக்க வேண்டிய வேலைகள் தொடர்பாக ரயில்வே துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகள்
• சுமைப்பணியாளர்கள் (கூலி போர்ட்டர்) அறையை அகற்றி பொருட்களை இடமாற்றம் செய்தல் நிறைவு.
• கட்டு சிப்பம் (பார்சல்) அலுவலக பகுதி நிலா அளவை கணக்கெடுப்பு மற்றும் சுத்தப்படுத்தும் பணி முடிவு.
• கிழக்கு முனைய கட்டிடத்திலிருந்து பொருட்களை இடமாற்றம் பணி முடிவு.
• கட்டுமானப்பணிக்கான தொகுப்பு ஆலை நிறுவல் முடிந்தது.
நடைபெற்று வரும் மற்ற பணிகள்
• திட்ட மேலாண்மை அலுவலகம் கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
• கிழக்கு முனையக் கட்டிடத்தின் ஒரு பகுதியாக தடுப்புகள் அமைத்தல், அகற்றுதல் மற்றும் இடமாற்றம் பணிகள்
• தற்போதுள்ள காத்திருப்பு கூடத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன
இதுவரை நிறைவேற்றப்பட்ட பணிகள்
• நில அளவை மற்றும் நிலப்பரப்பு ஆய்வு, மண் ஆய்வு, போக்குவரத்து ஆய்வு, மரங்கள் கணக்கெடுப்பு, அசையும் மற்றும் அசையா சொத்துகளின் கணக்கெடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த திட்ட சரிபார்ப்பு போன்ற பூர்வாங்க பணிகள் நிறைவடைந்தன.
• தற்போதுள்ள காத்திருப்பு கூட கட்டிடம், தற்போதுள்ள பன்னோக்கு கட்டிடம், பார்சல் அலுவலகம் மற்றும் துணை மின்நிலையம், குடியிருப்புகள், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நடைமேடை கூடாரப் பணிகள், நடைமேடை மற்றும் பிற வேலைகள், கிழக்கு முனைய கட்டிடம் மற்றும் பாதசாரிகள் மற்றும் புறப்படும் முன்பகுதியின் கட்டுமானம் ஆகியவற்றை மறுசீரமைப்பதற்கு ஒப்பந்தக்காரருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.