மதுரை:2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன. அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டிசம்பர் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை முதல்கட்டமாக நான்கு நாள்கள் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கிய அவர், மூன்றாவது நாளாக இன்று (டிச.15) மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் மௌனமான முறையில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த டிசம்பர் 13ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், முதற்கட்ட பரப்புரையை மதுரை அவனியாபுரம், அண்ணா நகர், கருப்பாயூரணி உள்ளிட்டப் பகுதியில் தொடங்கினார்.