‘துக்ளக்’ பத்திரிகையின் பொன் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து ஆளும் அதிமுக, திமுக, திக உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகள் முதல் பல்வேறு அமைப்புகள் வரை பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர், பெரியார் போன்ற தலைவர் குறித்து விவரம் அறியாமல் பேசக் கூடாது என ரஜினிக்கு அறிவுரை வழங்கினர்.
ஒருபக்கம் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும் பாஜக உள்ளிட்ட இந்து முன்னணிக் கட்சியினர் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அந்தவகையில், திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த அழகிரி, ரஜினியின் ஆதரவுக் குரலாகத் தொடர்ந்து ஒலித்துவருகிறார்.
பெரியார் குறித்து ரஜினியின் பேச்சு விஸ்வரூபம் எடுத்தையொட்டி, ரஜினி நடிப்பில் வெளியான ‘தர்பார்’ படத்துக்கு நஷ்டஈடு கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்து அழகிரி, நஷ்டஈடு கேட்பவர்களை ஆபிஸ் ரூம் அன்புடன் வரவேற்கிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினியின் ‘சிவாஜி’ படத்தில் லஞ்சம் கேட்பவர்களை உதைப்பதற்காக ஆபிஸ் ரூம் என்ற செட்டப் அமைக்கப்பட்டிருக்கும், இதனைக் குறிக்கும் வகையில் அழகிரி இந்த கருத்தை பதிவிட்டுள்ளதாகப் பேசப்பட்டுவருகிறது. இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேபோல் ரஜினிக்கு திராவிடர் கழகம் சார்பில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறி அழகிரி பதிவொன்றை இட்டுள்ளார். அதில், நண்பர் #ரஜினிக்கு கொலைமிரட்டல் விடுத்த #திக பிரமுகர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்! இது போன்ற மிரட்டல்களை இனி 'மன்னிக்க' முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 30ஆம் தேதி அழகிரியின் பிறந்தநாள் வந்தது. அப்போது ரஜினி அழகிரிக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அழகிரி, என் பிறந்த நாளன்று தொலைபேசியில் என்னை வாழ்த்திய குடும்ப நண்பர் ரஜினி அவர்களின் அன்பில் அகமழிந்தேன் (அகமகிழ்ந்தேன் என்பதைத்தான் அகமழிந்தேன் என்று சொல்லியிருப்பார் போலும்). காலம் கனியட்டும், வெற்றி நம் வசம்... எனப் பதிவிட்டுள்ளார்.
விரைவில் ரஜினி அரசியல் கட்சித் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படும் வேளையில், தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவாக அழகிரி பேசிவருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.