மதுரை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 22) நான்கு மையங்களில் நடைபெற்றது. திமுக பெருவாரியான வார்டுகளில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனாலும், ஒரே ஒரு தொகுதியில் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் பெற்ற தோல்வி திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, மதுரையில் தனது அரசியலை மிகத் தீவிரமாக மேற்கொண்டிருந்த காலத்தில் அவரது தீவிர ஆதரவாளர்களுள் ஒருவராக அறியப்பட்டவர்தான் முபாரக் மந்திரி. இவர் தான் வசிக்கும் 42ஆவது வார்டில் திமுக சார்பாகப் போட்டியிட கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் தர மறுத்து, அந்த வார்டை கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கீடுசெய்திருந்தனர்.