மதுரை மாவட்டம், மேலூர் கோட்டைக்கிணறு பகுதியைச் சேர்ந்த ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், 'எனது மகன் சிவனேஷ் (14). சற்று மனவளர்ச்சி குன்றியவர். தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட நாங்கள் மேலூருக்கு குடிவந்தோம். அழகர்கோவில் அருகேயுள்ள மனநலம் குன்றியோருக்கான பள்ளியில் சேர்த்து அவரை படிக்க வைத்தோம். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி காலை வீட்டருகே உள்ள கழிவறைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற எனது மகனை காணவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மேலூர் போலீசில் புகார் அளித்தேன். இதுவரை எனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனது வீட்டின் அருகே கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இவற்றை பார்த்தால் கூட எனது மகன் எங்கு சென்றான்? யாரும் கடத்தி சென்றார்களா என்பது தெரியும். போதுமான தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், சிறுவர்களைக் கடத்தி வடமாநிலங்களில் கொத்தடிமையாக வைத்து, உடல்பாகங்களை திருடி விற்பனை செய்வதாகத் தகவல் பரவுகிறது. எனவே, மேலூர் காவல்துறையினரிடம் உள்ள வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.