மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (ஆகஸ்ட் 6) நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை பார்வையிட அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 5) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். பின்னர் அமைச்சர்கள் மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசும்போது, "மதுரையில் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதன்முறையாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஜூன் மாதத்தில் வேகமாக அதிகரித்து, உச்சத்தை அடைந்தது. தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கரோனா தொற்று குறையத் தொடங்கினாலும் அதற்கான பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை (ஆகஸ்ட் 6) மதுரை வருகிறார். முன்னதாக, திண்டுக்கல்லில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். மதுரையில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் விவசாயத் துறையினர், தொழில் துறையினர் பங்கேற்க உள்ளனர்" என்றார்.