மதுரை:வீரம் என்ற மூன்றெழுத்தை தன் மூச்சாகக் கொண்ட வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆதரவுடனும், ஹைதர் அலி மற்றும் கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடனும் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப்படையை உருவாக்கி, ஏழு ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றி பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார்.
இதனைத்தொடர்ந்து 1789 ஆம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார். வட இந்தியாவைச் சேர்ந்த ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே, விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப் பெண்மணி வேலுநாச்சியார். இந்திய விடுதலை வரலாற்றில் வீரம் நிறைந்த வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ஈடாக எவரும் இல்லை.
சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் 1796 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இந்நிலையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் கலைப்பண்பாட்டுத் துறை மூலம் ஓ.வி.எம். தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞர்கள் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் முதலைமச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க வீரமங்கை வேலுநாச்சியாரின் வீர சரித்திரத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இசையார்ந்த நடன நாடகத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மற்றும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.