வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து, மே 3ஆம் தேதி முதல் மாநில அரசுகளின் உத்தரவுப்படி கிராமப்புறங்களில் ஊரக வளர்ச்சித் திட்டம் மூலம் 100 நாள் வேலை பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட திரளி கிராமத்தில் குறைவான வேலையாட்களுடன் தொடங்கிய 100 நாள் பணியை மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, 100 நாள் திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் பழங்கள் வழங்கி அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் ஊக்கப்படுத்தினர்.