மதுரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவுப் பொருள்களை தயாரிக்கும் பணியை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று தொடங்கிவைத்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் பாதுகாப்பு அரண் அமைத்து, பல்வேறு சீரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்துவருகிறார். அவரின் நடவடிக்கையால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நோய் பரவலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு முக்கியம். ஜூலை மாதம் வரை மக்களுக்குத் தேவையான ரேஷன் பொருள்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சையளிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. நோயை குணமாக்க மருந்தே இல்லையென்றாலும், கரோனாவைத் தடுக்க போராடி வருகிறோம். அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் உழைத்து வருகிறோம்.
உணவுப் பொருள்கள் தயாரிக்கும் பணியை தொடங்கிவைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாத்தான்குளம் சம்பவத்தில் முதலமைச்சரை பதவியைவிட்டுச் செல்லுங்கள் என அறிக்கைவிட்டுள்ள ஆ.ராசா, தன்னை அதிமேதாவியாக நினைத்துக்கொண்டுள்ளார். 2ஜி ஊழலில் தமிழ்நாடே தலைகுனிந்தது. முதலமைச்சரை விமர்சிக்கும் தகுதி ஆ.ராசாவுக்கு இல்லை. சாத்தான்குளம் சம்பவம் வருந்தத்தக்கது வேதனையானது. அந்தச் சம்பவம்போல் இனி உலகத்தில் எங்கும் நடைபெறக்கூடாது. சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துவருகிறார்.
சாத்தான் வேதம் ஓதுவது போலத்தான் ஆ.ராசா பேசுவது. எதற்கெடுத்தாலும் மாநில அரசு மீது நம்பிக்கையில்லை. சிபிஐ விசாரணைதான் தேவை என திமுக கூறிவருகிறது. ஆனால், தற்போது சிபிஐ விசாரணை தேவையில்லை என திமுக கூறுவது வேடிக்கையாக உள்ளது. சிபிஐ விசாரணை விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் போடுவது நிருபணம் ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக காணாமல் போனதற்கு காரணமே ஆ.ராசாவும், அவரது 2ஜி ஊழலும்தான்" என்றார்.
இதையும் படிங்க:’உதயநிதி இ-பாஸ் விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது’ - கே.என்.நேரு