மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜூன்.12) ஆய்வு மேற்கொண்டார். தமிழ்மக்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் புராதான சின்னங்களை பாதுகாத்து, மேம்படுத்தும் அரசின் முயற்சி குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ”தமிழ்நாடு மக்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் வகையில் ஏராளமான புராதான சின்னங்கள், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன. அவற்றில் தென் தமிழகத்தில் முக்கியமான ஒன்றாக மன்னர் திருமலை நாயக்கர் மஹால் உள்ளது.
தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தை தமிழ் சமுதாயம் மட்டுமன்றி, உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், அவற்றை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.
மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையை ரூ. 8 கோடி மதிப்பில் மீண்டும் பழமை மாறாமல் புதுப்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நமது வரலாற்று சின்னங்களை நாகரீகம், பழமை மாறாமல் புதுப்பிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை பல்வேறு கால சூழ்நிலைகளையும் தாங்கி, நமது தமிழ் மக்களின் கலாச்சாரத்தை பறைசாற்றி வருகிறது. தற்போது திருமலை நாயக்கர் அரண்மனை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, பழமை மாறாமல் ஒளி - ஒலி காட்சி இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கற்சிற்பங்கள், கல்வெட்டுகள் மூலம் நமது கலாச்சாரத்தை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹால் புதுப்பிக்கும் பணி மூன்று கட்டமாக துவங்க உள்ளன. முதல்கட்டமாக வெளியில் உள்ள பூங்கா புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டு, நூலகம் அமைக்கப்படுகிறது” என்றார்.