மதுரை மாவட்டதிலுள்ள சோலை அழகுபுரத்தில் அரசு சார்பில் 644 பயனாளிகளுக்கு இரண்டு கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான தாலிக்குத் தங்கம், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அரசுத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அங்கு அவர் பேசுகையில், “மதுரையில் கருணாநிதி சிலை அமைக்க அதிமுக அரசு முட்டுக்கட்டைப் போட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார். நாங்கள் முட்டுக்கட்டைப் போட்டிருந்தால் மதுரையின் மையப் பகுதியில் சிலை வைக்க அனுமதி கொடுத்திருப்போமா? எங்கோ ஒரு கடைக்கோடி மூலையில் அமைக்கத்தான் அனுமதி கொடுத்திருப்போம்.
செல்லும் இடங்களிலெல்லாம் விளம்பரத்திற்காகப் பொய் பேசிக்கொண்டே இருக்கிறார் ஸ்டாலின். அமைச்சர்களை கேலி பேசுவதாக நினைத்து ஸ்டாலின் அவராகவே கேலி கிண்டலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்.
உலகத்தில் எந்த நாட்டிலும் இணைய வசதி இலவசமாக கொடுத்ததில்லை, அதிமுக அரசு மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கியுள்ளது. எதிர்க்கட்சியை மதிக்காமல் எதிர்க்கட்சிகளை அரசியல் செய்யவிடாமல் தடுப்பவர்கள் திமுகவினர், மு.க. ஸ்டாலின் மக்களிடம் மனுவைப் பெற்று 100 நாள்களில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறி மக்களை ஏமாற்றுகிறார். ஆட்சிக்கு வரும் முன்னரே மனுவை வாங்கி மக்களை ஏமாற்றுகிறார்.
நான் மறைந்தாலும்கூட நான் செய்த திட்டங்கள் மதுரையில் நிலைத்திருக்கும் அதை மு.க. ஸ்டாலின் மறைக்க முடியாது. படிக்கவே தெரியாத மு.க. ஸ்டாலின் எப்படி முதலமைச்சராக முடியும். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும். அதிமுக அரசை பாராட்டவில்லை என்றாலும்கூட கேலி கிண்டல் செய்ய வேண்டாம். மக்கள் மத்தியில் பொய்யான பரப்புரையைச் செய்து ஆட்சிக்கு வர திமுக நினைக்கிறது” என்றார்.