சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றால் அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி ஆகியோர் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று (ஜூலை 30) அவர்கள் குணமடைந்து மதுரை திரும்பினர். அப்போது மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பாக மேடை அமைத்து, பட்டாசு வெடித்து, அமைச்சருடைய ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, "வடிவேல் சொன்னது போல போகிறபோக்கில் கரோனா என்னை லைட்டாக டச் பண்ணிட்டு போயிருச்சு. இப்போது குணமடைந்து விட்டேன். என் வாழ்வில் உறுதுணையாக இருக்கும் என் மனைவிக்கு கரோனா தொற்று ஏற்பட்டபோது, அவர் அஞ்சிவிடக்கூடாது என்பதற்காக ஆறுதல் சொல்ல சென்றேன். எனக்கும் தொற்று ஏற்பட்டது. உரிய சிகிச்சைப் பெற்று இருவரும் குணமடைந்துவிட்டோம். நாளை (ஜூலை 31) முதல் பொதுப்பணியில் ஈடுபடவுள்ளேன்" என்றார்.