மதுரை தமுக்கம் மைதானத்தில் தற்போது உருவாகிவரும் கலாச்சார மையத்திற்கான கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஆக20) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம், வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் விதமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
வைகையை சீரமைக்கும் பணிக்காக மட்டும் ரூபாய் 364 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக காமராஜர் பாலம் முதல் ராஜா மில் பாலம் வரை இரண்டு கிலோமீட்டர், குருவிக்காரன் சாலை முதல் விரகனூர் வரை 3 கிலோ மீட்டர் ஆக வைகை ஆற்றில் இரண்டு பக்கமும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிச் சாலை அமைக்கப்பட்டுவருகிறது.
இந்தப் பணிகளுக்காக, 303 கோடியே 59 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது. இது தவிர, வைகை ஆற்றில் இரண்டு பக்கமும் தடுப்புச்சுவர், நடைபாதை, மழைநீர் வடிகால், வாய்க்கால் மற்றும் 10 இடங்களில் படித்துறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த படித்துறைகள் அனைத்தும் பழமையும், புதுமையும் நிறைந்ததாக இருக்கும்.
தற்போது தடுப்புச்சுவர் கட்டும் பணி 8,200 மீட்டர் நீளத்திற்கு முடிவடைந்துள்ளது மீதமுள்ள பணிகள் அனைத்தும் வருகின்ற 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். வைகையில் இருபுறமும் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் இருந்தன. அவை அனைத்தும் அகற்றப்பட்டு தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டு இந்த பகுதியில் நான்குவழிச்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்காக 60 கோடியே 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மட்டும் 3 ஆயிரம் 200 மீட்டர் தூரத்திற்கு நிறைவடைந்துள்ளது.இதர பணிகள் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன. ஏற்கனவே, மதுரை மாநகருக்குள் இரண்டு இடத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.