மதுரை :மீனாட்சி அம்மன் கோயிலில் மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்து, வீர வசந்தாராயர் மண்டப புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு இன்று(செப்.25) ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, ”மீனாட்சி அம்மன் கோயிலில் 2018ஆம் ஆண்டு தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஸ்தபதிகளுக்கு பல முறை டெண்டர் அறிவித்தும் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. எனவே, டெண்டர் ஒப்படைப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என ஆய்வு செய்து மூன்று ஆண்டுகளுக்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தாண்டு இறுதிக்குள் ரோப்கார் சேவை
வீர வசந்தராயர் மண்டப பணிகளின் காரணமாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அடுத்தாண்டு குடமுழுக்கு நடத்துவதில் ஆகமவிதியில் சிக்கல் உள்ளதா என ஆராய்ந்து பக்தர்களின் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும். அழகர்கோயில் பாதையை அகலப்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதால் அந்த பணிகள் விரைவுபடுத்தப்படும்.
சோளிங்கர், அய்யர் மலை கோயில்களில் இந்தாண்டு இறுதிக்குள் ரோப்கார் சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதனை தொடர்ந்து மேலும் ஐந்து கோயில்களுக்கு ரோப்கார் சேவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.