மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை சார்பாக மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் சக்கரபாணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "திமுக தேர்தல் அறிக்கையில் சுட்டிக் காட்டியது போல் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி 14 வகையான இலவச பொருள்களையும் திமுக அரசு வழங்கியுள்ளது.
வாடகை கட்டடத்தில் இயங்கும் நியாயவிலைக் கடைகளுக்கு சொந்தமாக கட்டடம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கைகள் அலுவலர்கள் மூலம் வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து 2 ஆண்டுகளில் நியாய விலைக்கடைகள் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. புதிதாக குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பம் செய்தவர்களுக்கு 15 நாள்களில் புதிய குடும்ப அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.