மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முழுதும் வடகிழக்கு பருவமழையால் பகுதியாக வீடுகள் சேதமடைந்த 59 பேருக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்வில் மதுரை ஆட்சியர் த.அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழ்நாடு விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் பாரத் பந்த் தோல்வியடைந்துவிட்டது. 2016ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டத்தின் சாராம்சத்தை வாக்குறுதியாக கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 100 விழுக்காடு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பயிர் காப்பீடு செய்யப்படவில்லை. பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது, விவசாயிகளை எதிர்க்கட்சிகள் ஏமாற்ற நினைக்கின்றன.
அதிமுக தலைமைக்கு துணையாக இருக்கவே நாங்கள் பணியாற்றி வருகிறோம். திமுகவில் கிளை செயலாளராக கூட இல்லாத உதயநிதி உயர் பதவிக்கு வந்துள்ளார். உதயநிதிக்கு வாழ்த்து சொல்லி விட்டு தான் திமுகவினர் கட்சி பணியை தொடங்குகிறார்கள்.