மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள மேட்டுப்பட்டியில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு தலைமை வகித்தார். தொடர்ந்து கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில்,"தனது ஆதரவு பெற்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை வீழ்த்த எண்ணியவர்களுக்கு பொதுமக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள்.
இன்றைக்கும் ஐநா சபையில் எம்ஜிஆரின் சத்துணவு திட்டம் தான் பேசுபொருளாக உள்ளது. எம்ஜிஆருக்கு ஒன்று தெரியாது என்றால்.? அது மக்களை ஏமாற்ற மட்டும் தான் எம்ஜிஆருக்கு தெரியாது. ஆனால் கருணாநிதிக்கு மக்களை ஏமாற்றுவது எப்படி என்று தெரியும். இதனால் தான் எம்ஜிஆர் அரியாசனம் ஏறியதற்குப் பிறகு கலைஞர் அரியாசனத்தை ஏற முடியவில்லை.
அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டக்அவுட் செய்வதற்காக ஸ்டாலின் பலமுறை பந்து வீசியிருக்கிறார். ஆனால், அனைத்து பந்துகளையும் சிக்ஸராக தான் முதலமைச்சர் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக இருந்த ஆட்சியாளர்கள் புகைப்படக்கலைஞர் வந்துவிட்டார்களா எனப் பார்த்து விட்டு அவர்கள் முன்பாக பொங்கல் வைப்பது போன்று நாடகம் நடத்துவார்கள்.
ஆனால், இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய், பொங்கல் பரிசு சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்புதான், பொங்கலை கொண்டாடினோம். இதேபோல், எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டிற்கு வராது என்று கூறுவது திமுக தான், அவ்வாறு கூறி அருகில் உள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, பின்னர் அதிக விலைக்கு விற்று விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறது.