மதுரை மாவட்டம் கீழ் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி ஆகியப்பகுதிகளில் ஒரு வழித்தட சாலையினை இரு வழித்தடமாக மாற்றி, அமைப்பதற்கான 602 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூமி பூஜை நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்ட விழாவினை வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 'சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கின்ற, வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவாக்கியுள்ளதாகவும்; அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் எப்படி ஒரு பழத்திற்காக ஏங்கி ஏங்கி கடைசியில் அந்தப் பழம் கிடைக்கவில்லை என்றால், ச்சீ... இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்வார்களோ... அதுபோல் ஐந்து முறை ஆட்சியில் இருந்தும் எந்தவிதமான விருதுகளையும் அங்கீகாரங்களையும் மக்கள் செல்வாக்குகளையும் பெற முடியவில்லை" எனத் தெரிவித்தார்.
தற்போது தமிழ் இனத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் சிறப்பினை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அரசியல் நாகரிகத்தை கடந்து பேசுகிறார் என்றால், அது அவருடைய இயலாமையைக் காட்டுகிறதாகவும் கூறினார்.
'இன்று தமிழ்நாடு அரசிற்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த விருது ஏதோ எடுத்தோம்; கவிழ்த்தோம் என்று கொடுக்கப்படவில்லை. முழுமையாக ஆராய்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளன்று 'நல்லாட்சி நடத்துகின்ற நாடு' என தமிழ்நாட்டினை அடையாளப்படுத்தி இருக்கின்றனர்.