மதுரை: சிறைவாசிகளால் நிர்வகிக்கப்படும் மதுரை மத்திய சிறை பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம் திறப்பு விழா நேற்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை, சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்விற்கென கல்வி திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, தொழிற்கூட பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் சிறை வளாகங்களில் சிறை அங்காடிகள் தொடங்கிட அரசால் அனுமதி வழங்கப்பட்டு அதில் சிறைவாசிகளால் தயார் செய்யப்படும் பாலி விஸ்கோஸ் துணி (காக்கி மற்றும் வெள்ளை) ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், நோட்புக், பூச்செடிகள், மண்புழு உரம், காய்கறிகள், ஓவியங்கள், மழைக்கோட், செக்கு எண்ணைய் வகைகள், அடுமனைப் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், போர்வைகள், துண்டுகள், தலையணை உறைகள் உள்ளிட்ட பல பொருட்கள் சிறைவாசிகள் மூலம் தயார் செய்யப்பட்டு சிறை சந்தை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இச்செயல்பாடுகள் மூலம் சிறைவாசிகள் தினசரி ஊதியம் மற்றும் லாபத்தில் ஒரு பங்குத் தொகையும் பெற்று வருகின்றார்கள்.
சிறை அங்காடிகளின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக கோவை, புழல், வேலூர், பாளையங்கோட்டை, பார்ஸ்டல் பள்ளி புதுக்கோட்டை ஆகிய 5 மத்திய சிறை வளாகங்களில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு சிறைத்துறையால் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து நடத்த அரசால் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் ப்ரிடம் பில்லிங் ஸ்டேசன் என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் 31ம் தேதி வரை அனைத்து பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களின் மூலமாக ரூ.847.31 கோடி மொத்த விற்பனை செய்யப்படுகிறது. இதில் இலாபம் ரூ.23.94 கோடி பெறப்பட்டு, சிறைவாசிகளின் ஊதியமாக ரூ.2.37 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கோவை, புழல், திருச்சி 1, திருச்சி 2, சேலம் மற்றும் மதுரை ஆகிய மத்திய சிறைகளில் 6 பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் நிறுவிட தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டது. இவற்றில் மதுரை புது ஜெயில் சாலையில் புதிதாக கட்டப்பட்ட ப்ரிடம் பெட்ரோல் நிலையத்தை நேற்றுசட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் ரகுபதி பேசும்போது; ”சிறைச்சாலை ஒரு கைதியை தண்டிக்கிற அல்லது கண்டிக்கிற இடமாக அன்றி திருத்தும் இடமாக அமைய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தல் படி பல்வேறு திட்டங்கள் மூலம் செயலாற்றி வருகின்றோம். சிறைகளில் சிறைவாசிகள் தயாரிப்பு பொருட்களான சுங்கடிச் சேலை, போர்வை, மர சாமான்கள், கலப்படமற்ற எண்ணெய், உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதன்மூலம் சிறைவாசிகள் ஈட்டும் வருவாய் கொண்டு கைதிகள் தங்களது குடும்பத்தை நிர்வாகம் செய்து வருகிறார்கள்.