தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 25, 2020, 6:10 PM IST

ETV Bharat / state

ஆட்டு இறைச்சியின் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை: அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்குள் உள்ளது போல், ஆட்டு இறைச்சியின் விலையையும் கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர் பி உதயகுமார்
அமைச்சர் ஆர் பி உதயகுமார்

மதுரை, கே. கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு கரோனா விழிப்புணர்வு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ”மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள 5,000 கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயிற்சி முகாம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

முதலில் மாணவர்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வல்லுநர்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்படுக்கிறது. அதன் பின்னர், அந்த 5,000 மாணவர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். ஐந்தாம் கட்ட ஊரடங்கு குறித்து மத்திய அரசு அறிவித்த பின் அவர்கள் கூறும் நடைமுறைக்கேற்ப முதலமைச்சர் ஆலோசனை செய்து தளர்வுகளை அறிவிப்பார்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை தற்போது கட்டுக்குள் உள்ளது. ஆட்டிறைச்சியின் விலையையும் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டு சந்தைகள் செயல்படத் தொடங்கிய பின், இறைச்சி விலை கட்டுக்குள் வரும்” என்று தெரிவித்தார்.

திமுகவிலிருந்து விலகிய வி.பி. துரைசாமி, அதிமுகவில் சேராமல் பாஜகவில் சேர்ந்துள்ளாரே என்ற கேள்விக்கு, ”அதைப்பற்றி அந்தந்த கட்சிகள் கவலைப்பட்டு கொள்ளட்டும், மக்களை கரோனாவிலிருந்து பாதுகாக்கும் வேலையை மட்டுமே அதிமுக அரசு பார்த்து வருகிறது” என்றார்.

இதையும் படிங்க:ஈகை திருநாள் வாழ்த்து தெரிவித்த மம்தா பானர்ஜி!

ABOUT THE AUTHOR

...view details