கோயில் யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் - பிடிஆர் மதுரை:உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானையின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக குளித்து மகிழ்ந்து விளையாடும் வகையில் 23.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட குளியல் தொட்டியினை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று ( ஏப்.16 ) திறந்து வைத்தார். குளத்தில் யானை ஓடி ஆடி மகிழ்ந்து உற்சாகமாக விளையாடியது.
பின்னர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு ஏற்பட்ட கண் பிரச்னை மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக யானை சிமென்ட் தரையில் நிற்பதால் அதன் எலும்புகளில் அழுத்தம் ஏற்படுகிறது.
இதனைத் தீர்க்கும் விதமாக மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் குளியல் தொட்டி கட்டப்பட்டு இன்று (ஏப்.16 ) திறந்து வைக்கப்பட்டது. அதில் பார்வதி யானை ஆனந்தமாக விளையாடியது. இதன் மூலம் யானை பார்வதிக்கு எலும்புகளில் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறையும், மேலும் உடலில் ஏற்பட்ட புண்கள், அதற்கான மருந்துகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
யானைக்கு கண் அறுவை சிகிச்சை செய்தால் அறுவை சிகிச்சைக்குப் பின்பாக யானையை பராமரிப்பது மிகவும் கடினம் என்பதால் மருந்துகள் கொடுத்து கண் பிரச்னை மேலும் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க:காலில் விழுந்து பதவிபெற்று காலை வாரும் கலையைக் கற்றவர் - பாஜகவினர் விமர்சனத்தால் கொதித்த அதிமுகவினர்