மதுரை :முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பயனடையும் ஆயக்கட்டு விவசாயிகளை பாதிக்கும் நீர் திருட்டு பிரச்னை, அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து நேரடியாக குழாய் வழியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தின் தற்போதைய நிலை ஆகியவை குறித்த ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஜூலை 7) நடைபெற்றது.
இதில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வரக்கூடிய நீர், ஆயக்கட்டு பகுதியில் உள்ள 2 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கருக்கு முறைப்படி வழங்கப்பட வேண்டும்.
சரியான நேரத்தில் நீர் திறப்பு
இதற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த ஆயக்கட்டு விவசாயிகளுக்கு உரிமை உண்டு. அதில் குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு, மதுரை மாவட்டத்தின் சில இடங்களில் இரண்டு போகத்திற்கு உரிமை உண்டு.
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் சரியாக ஜூன் மாதத்தில், வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாவது போக பாசனத்தை உருவாக்குகிற வகையில், முதல் போக பாசனத்திற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதல்
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, வைகை அணைக்கு வரும் நீர் திருடப்படுவது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதப்பட்டது.
அதில், “விவசாயிகள் அல்லாதவர்கள், நீர் திருட்டை தொழிலாக கொண்டவர்கள் கனரக மோட்டார்களை பயன்படுத்தி நீரை முறைகேடாக எடுக்கின்றனர்.
ஒரே நாளில் உயர்ந்த நீர்மட்டம்
சட்டத்திற்கு விரோதமாக பட்டா, பட்டா இல்லாத அரசு மற்றும் வனத்துறை இடங்களில் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு நீர் எடுக்கப்பட்டது. இதனால் பல விவசாயிகள், ஆயக்கட்டிற்கு நீர் பெற முடியாமல் விவசாயத்தையே கைவிடக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கடுமையான நீர் தட்டுப்பாடு ஏற்பட்டது” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த நீர் திருட்டு முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, தொடர ஆரம்பித்தது. இதனைப் பொதுப்பணித்துறை வெளியிடக்கூடிய குறிப்புகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பதற்காக, இணையத்தில் இது குறித்த தகவலை வெளியிடுவதையே நிறுத்தி விட்டனர்.
இதற்கு பிறகு விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது இதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறையினர், மின்சாரத் துறையினர் யார்? யார்? இணைந்து இந்தத் தவறில் ஈடுபட்டனர், எந்த அளவிற்கு நீர் திருடப்பட்டுள்ளது என ஆராயப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்காத முந்தைய அரசு
தற்போதுள்ள தகவலின்படி 527 இடங்களில் ஆயக்கட்டு அமைப்பிற்கு விரோதமாக நீர் திருடப்படுகிறது. சிறு விவசாயிகள் பயன்படுத்திடாத 15 குதிரைத்திறன் அளவு கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தி, மின்சாரத்துறைக்கு ஒரு நாளைக்கு முப்பது லட்சம் ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
இது போன்ற சமுதாய துரோகத்தை நினைத்துக் கூட பார்த்தது இல்லை. அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு தனி நபர் காரணமாக இருக்க முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கும் வகையில் முயற்சி இருக்கும்.
வைகையில் மீண்டும் நீர் ஓடும்
விவசாயிகள் முழுமையாக பயனடையும் வகையில் இதனை செய்து முடிக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள தேனி ஆட்சியரிடம் இது குறித்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆய்வுகளுக்கு பிறகும் சரி வர முடிவுகள் வராவிட்டால், தனியாக தணிக்கை நடத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாறு, லோயர் கேம்ப் 125 எம்.எல்.டி தண்ணீர் பெரும் திட்டத்தின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மே, 2023க்குள் பணிகளை முடித்து தேர்தல் வாக்குறுதியின்படி மதுரை மாவட்ட, நகர்ப்புற பகுதிகளுக்கு தன்னிறைவு பெரும் வகையில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக வறண்டு போன வைகை நதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் நீர் ஓடும் நதியாக மாறும்” என்றார்.
இதையும் படிங்க:பாஜகவுடன் கூட்டணி தொடரும்: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை