தமிழ்நாட்டில் நேற்று (மே 24) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் தோறும் ஊரடங்கு நடைமுறைகளைக் கண்காணிக்க அமைச்சர்கள் அடங்கியக் குழுவை அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள போக்குவரத்து சந்திப்பில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினரிடம் போக்குவரத்து நடமாட்டம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "முழு ஊரடங்கை மக்கள் 100 விழுக்காடு பின்பற்றி வருகிறார்கள்.
மருத்துவத் தேவைகளைத் தவிர பிற காரணங்களைச் சொல்லி மக்கள் வெளியே வரவில்லை. கோரிப்பாளையம் பகுதியில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இருப்பதால், அங்கு பணியாற்ற கூடியவர்கள், நோயாளிகள் செல்வதால் அப்பகுதியில் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன.
மதுரையில் விரைவில் கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் மற்றபடி ஊரடங்கை முழுமையாக மக்கள் பின்பற்றி வருகின்றனர். மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். மக்கள் தேவைக்கேற்ப காய்கறிகள் வீடு வீடாகச் சென்று வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர், ஆணையர் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். மதுரையில் விரைவில் கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும்" என்றார்.
இதையும் படிங்க: அறநிலையத்துறையில் ஸ்டாலினின் ஆஹா திட்டம்