மதுரை:ஆனையூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரியாறு பிரதான கால்வாயின் நான்காவது கிளையைத் தூர்வாரும் பணியை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இன்று (செப்.20) தொடங்கி வைத்தார்.
இந்த நான்காவது கிளை கால்வாய் வழியாக பெரியாறு பாசன நீரும் மேலப்பனங்காடி, கீழப்பனங்காடி ஆகிய கண்மாய்களின் உபரி நீரும் ஆனையூர் கண்மாய்க்கு வந்து சேருகிறது. ஆனையூர் கண்மாயின் உபரி நீரானது மதுரை மாநகராட்சி குடியிருப்பு பகுதிக்குள் சென்று செல்லூர் கண்மாயை அடைகிறது. இக்கால்வாயின் மொத்த நீளம் 3,650 மீட்டர் ஆகும்.
வடகிழக்கு பருவமழையினால் நகரப் பகுதிகளில் வெள்ள நீர் சூழும் வாய்ப்புள்ளது. மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது.
இந்த இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில் கால்வாய்களை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.