மதுரை:மதுரை நாராயணபுரம் பகுதியில் ஏற்பட்ட மேம்பால விபத்து பகுதியினை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது:
'சாகர்மாலா திட்டத்தின்கீழ் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டம், 3 ஆண்டுகாலமாக நடைபெறுகிறது.
அப்பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. மேம்பால விபத்து தவிர்க்கப்பட வேண்டியது. ஒப்பந்ததாரரின் மெத்தனம் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளது.
ஒப்பந்ததாரரின் அலட்சியம்
பாலம் இணைப்புப் பணியின்போது கிர்டரை (Girder) இணைக்கும்போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. 160 டன் கிர்டரை தூக்கி நிறுத்த 200 டன் எடையுள்ள ஹைட்ராலிக் இயந்திரம் ஏன் பயன்படுத்தப்பட்டது என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம்.
இது பாதுகாப்பற்ற நிலையில் செயல்படுத்தியதன் காரணமாக நடைபெற்றுள்ளது. முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம்.
பணி நடைபெற்ற இடத்தில் மேற்பார்வை பொறியாளர் இருப்பதற்குப் பதிலாக தொழிலாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர். சரியான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத நிலையில் பணிகள் நடைபெற்றுள்ளன. ஹைட்ராலிக் ஜாக் தன்மை குறித்து விசாரணை நடத்தி ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம்.