ஆக்சிஜன் வருகைக்காக அதிகாலை வரை காத்திருந்த அமைச்சர் - மதுரை மருத்துவமனையில் பரபரப்பு - oxygen scarcity
ஆக்சிஜன் லாரி வருகை காலதாமதம் குறித்த காரணங்களை மருத்துவமனை முதல்வர் சங்குமணி, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், கூடுதல் ஆட்சியர் உள்ளிட்டோரை நேரில் வரவழைத்து விவரங்களைக் கேட்டறிந்தார். அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் களத்தில் இறங்கி பணியாற்றியது பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை:ஆக்சிஜன் வர காலதாமதமானதால் நேரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர் மூர்த்தி, அதிகாலை 2 மணி வரை காத்திருந்து ஆக்சிஜன் நிரப்பிய பின்பு கிளம்பினார்.
மதுரை அரசு ராஜாஜி கரோனா சிறப்பு மருத்துவமனை வளாகத்தில், தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் ஆக்சிஜன் லாரி வரும் வரை காத்திருந்து ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 24 மணி நேரமும், தென் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. இதனருகில் கரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அங்கு சுமார் 1,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு நேற்று மாலை 3 மணிக்கு வரவேண்டிய ஆக்சிஜன் லாரி இரவு 10 மணி வரை வராது காலதாமதம் ஏற்பட்டது. தாமதமானால் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என தகவல் அறிந்த வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை தனியார் ஆக்சிஜன் தயாரிப்பு மையத்திற்கு உடனடியாக சென்று அங்கிருந்து ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தார். ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து ஆக்சிஜன் முழுவதும் நிரப்பிய பின்பு அங்கிருந்து கிளம்பி சென்றார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் உடனிருந்தார்.
அவசரம் கருதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருவதால், உடனடியாக இங்கே ஆக்சிஜன் தேவை என ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறை அலுவலர்களுக்கு வலியுறுத்தி அதிகாலை 2 மணி அளவில் சிலிண்டர் லாரி வரும் வரை மருத்துவமனை வாயிலில் காத்திருந்தனர். பின்னர் லாரியில் வந்த ஆக்சிஜனை கொள்கலனில் ஏற்றும் பணி நடைபெற்றது.
ஆக்சிஜன் லாரி வருகை காலதாமதம் குறித்த காரணங்களை மருத்துவமனை முதல்வர் சங்குமணி, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், கூடுதல் ஆட்சியர் உள்ளிட்டோரை நேரில் வரவழைத்து விவரங்களைக் கேட்டறிந்தார். அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் களத்தில் இறங்கி பணியாற்றியது பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.