மதுரை: விருதுநகர் மாவட்டம், ஆவியூர் கிராமத்தில் டீ கடைகள், உணவகங்கள் மற்றும் முடி திருத்த கடைகளில் பட்டியலின சமூக மக்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளதை எதிர்த்தும், தீண்டாமை கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செல்லாயி அம்மன், அய்யனார் கோயில் திருவிழாக்களில் பட்டியலின சமூகத்தினரும் வழிபாட்டில் பங்குபெற அனுமதி வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வழக்கு தொடர்ந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருத்தார். அதில் “விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூர் கிராமத்தில் சுமார் 3000 துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதே போல் ஆவியூர் தெற்கு தெருவில் 300க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களும் வசித்து வருகின்றனர்.
ஆவியூர் கிராமத்தில் அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான செல்லாயி அம்மன் கோயில் ஈஸ்வரன் கோயில் மற்றும் அய்யனார் கோயில்கள் உள்ளன. ஆனால் இந்த கோயிலுக்குள் செல்வதற்கும், திருவிழாக்களின் போது முளைப்பாரி எடுத்தல், வேல் குத்துதல் வரி வசூல் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பட்டியலின மக்கள் பங்கு பெறுவதற்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.