மதுரை:திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளத்தைச் சேர்ந்தவர் பாவநாசம். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், எனது மகன் முத்து மனோ, கொலை மிரட்டல் வழக்கு ஒன்றில் களக்காடு காவல்துறையினரால், கைது செய்யப்பட்டு திருவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் திடீரென அவர், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த ஏப்.,22ஆம் தேதி என் மகன் சக கைதிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை குறித்து நீதி துறை விசாரணை நடத்தவும், ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும், சிறைத் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், ரூ 2 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.
இந்த மனுவினை ஏற்கனவே விசாரணை செய்த உயர் நீதிமன்றம், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. அத்துடன், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சிறை காவலர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இறந்து போன முத்து மனோவின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.