மதுரை:சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க மேலும் 5 மாதம் கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிட கோரிய மனு மீதான விசாரணையில், இந்த வழக்கில் மேலும் எத்தனை சாட்சிகளை விசாரிக்க வேண்டும், எவ்வளவு அவகாசம் தேவை என்பது குறித்து எழுத்து பூர்வமாக, மத்திய புலனாய்வு அமைப்பு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 30 ம் தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த இருவரும் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர். இதனை அடுத்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிந்தது. 9 பேர் மீது குற்றப்பத்திரிகையை கடந்த 2020 செப் ல் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. மேலும் இந்தகொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ள போலீசார்கள் செல்வாக்கு மிக்கவர்கள். சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது. எனவே மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 2 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.