மதுரை : திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரசூல் மைதீன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "மேலப்பாளையம் பகுதியில் தனியார் வணிக வளாகத்திற்கு எதிர்புறத்தில் அன்சாரி என்பவர் ருசி எனும் பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
அங்கு அலுவலர்களிடம் முறையான அனுமதி எதுவும் பெறாமல் கொலம்பஸ், சறுக்கு விளையாட்டு, ஜெயண்ட் வீல், நீச்சல்குளம் போன்றவற்றை நடத்தி வருகிறார்.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு, முதலுதவி வசதி போன்றவை எதுவுமின்றி பொழுதுபோக்கு பூங்க நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பல பிரபலமான பொழுதுபோக்கு பூங்காக்களில் கூட ஏராளமான விபத்துகள் நிகழ்ந்து பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
ஆகவே, நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ருசி ஹோட்டல் சார்பில் நடத்தப்படும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா ஸ்ரீமதி அமர்வு, பொழுதுபோக்கு பூங்காக்களை நடத்த ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா? யாரிடம் அனுமதி பெற வேண்டும்? என கேள்வி எழுப்பினர். மேலும் "இந்த வழக்கில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகவே தமிழகத்தில் அமியூஸ்மெண்ட் பார்க் எனப்படும் பொழுதுபோக்கு பூங்காக்களை நடத்த ஏதேனும் விதிகள் உள்ளதா?.
அங்கு முறையாக பயிற்றுவிக்கப்பட்ட நபர்கள் உள்ளனரா? அவசரத் தேவை எனில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், முதல் உதவி செய்யும் வசதி போன்றவை உள்ளனவா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, நீதிபதிகள் இவ்வழக்கில் சுற்றுலாத்துறை செயலரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கிறது.
தமிழ்நாட்டில் பொழுதுபோக்கு பூங்காக்களை அமைப்பது மற்றும் முறைப்படுத்துவது தொடர்பாக ஏதேனும் விதிகள் உள்ளதா? இல்லை எனில் ஏன் உருவாக்கக் கூடாது? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்