மதுரை:தமிழ்நாட்டின் பாரம்பரியப் பெருமைக்குரிய கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கடந்த சில ஆண்டுகளாக நிதிப்பற்றாக்குறையில் சிக்கித்தவித்து வருகிறது. அதன் தீவிரம் கடந்த சில மாதங்களாக மிகக்கடுமையாக எதிரொலிக்கத்தொடங்கியிருக்கும் நிலையில், அங்கு ஒப்பந்தப் பணியாளர்களாக தற்காலிகமாகப் பணியாற்றிய ஊழியர்கள் 136 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அனைத்து மட்ட ஊழியர்கள், அலுவலர்கள், பேராசிரியர்களுக்கு சம்பளம் தருவதற்குக்கூட பணமில்லாததால், தமிழ்நாடு அரசின் உதவியை எதிர்பார்க்கும் நிலைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு அரசு ரூ.8 கோடி நிதியை வழங்கிய காரணத்தால், அக்டோபர் மாதச்சம்பளமே தீபாவளிக்கு ஒரு சில நாட்கள் முன்புதான் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலை வருகின்ற மாதங்களிலும் தொடர உள்ள நிலையில், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர். மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கத்தின் தலைவரும் பேராசிரியருமான முனைவர் சீனிவாசன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம்தான் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதன்பிறகு 1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுரைப் பல்கலைக்கழகம்தான் இரண்டாவது பெருமைக்குரியது. 1980-களில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப்பெயர் மாற்றம் கண்டது.
கடந்த 2010ஆம் ஆண்டு வரை காமராசர் பல்கலைக்கழகம் நிதி ஆளுகையில் தற்சார்புடன் இயங்கி வந்தது. தமிழ்நாட்டிலேயே தொலைதூரக் கல்வி இயக்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்தான் செயல்பட்டு வந்தது. 2010ஆம் ஆண்டிற்குப்பிறகு, தமிழ்நாட்டில் நிறைய பல்கலைக்கழகங்கள் உருவாகத்தொடங்கின. இதனால், தொலைதூரக்கல்வி இயக்கத்தின் வளர்ச்சி தடைபட்டது. இதனால் காமராசர் பல்கலைக்கழகத்தின் வருமானம் பெருமளவு குறையத்தொடங்கியது. இது முக்கியமான காரணம்.
அடுத்ததாக பல்கலைக்கழக நிதியைச்சரிவர கையாளாததால் நெருக்கடி ஏற்படத்தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் இங்கு பணியாற்றிய துணைவேந்தர்களின் அணுகுமுறையாலும் நிதி நிலை மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டது. தற்போது பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் பேராசிரியர்களுக்கு சம்பளம் தருவதற்கு இயலாத நிலை மட்டுமன்றி, ஓய்வூதியர்களுக்கும்கூட பணம் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தச்சிக்கல் 2021 நவம்பர் மாதம் தொடங்கியது. அப்போதிருந்துதான் சம்பளம் சரிவர வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக எங்கள் தரப்பிலிருந்து உயர் கல்வித்துறை அமைச்சர், செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோன்று நிதியமைச்சர், நிதித்துறை செயலாளரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஒருகட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சரின் பார்வைக்கும்கூட கொண்டு சென்றுள்ளோம். தமிழ்நாடு அரசு அளித்துள்ள உறுதிமொழியும்கூட தற்காலிக நிவாரணம் மட்டுமே.
நிரந்தரத் தீர்வுக்கான வழி எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை. ஆனால், இனி வருகின்ற ஒவ்வொரு மாதங்களிலும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான உறுதியான நடைமுறையே இன்றைய தேவை. ஆனால், இதுவரை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழக தணிக்கை ஆட்சேபனைகளை சரிசெய்து கொண்டு வாருங்கள் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.