திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பால சந்திரபோஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘1997ஆம் ஆண்டு பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதனை 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இவர்களில் அண்ணா பிறந்தநாளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேரும் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுபவர்களின் பட்டியலை தயாரிக்கும் குழு கடந்த 2018 பிப்ரவரி மாதம் ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் நன்னடத்தையின் கீழ் சில கைதிகளை முன்விடுதலை செய்வதற்காக பட்டியலை தயாரித்து பரிசீலனை செய்தது.