மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ளது மேக்கிலார் பட்டி. ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் இவ்வூர் மக்களுக்கு விவசாயம் முக்கியத் தொழிலாக விளங்குவதால் பெரும்பாலானோர் வீடுகளில் பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த வியாழனன்று அவ்வூரிலுள்ள எல்லாருக்கும் இயல்பாகத்தான் விடிந்தது.
ஆனால், எலக்ட்ரீசியன் ராகவேந்திரன் குடும்பத்தாருக்கு அன்று வழக்கமான நாளாக இல்லை. அந்த நாள்குறித்து விளக்குகிறார் ராகவேந்திரனின் மனைவி முத்து புவனேஸ்வரி, "கடந்த வியாழக்கிழமை காலை ஆறு மணியிருக்கும். வீட்டு வாசல்ல வேலை பாத்துக்கிட்டு இருந்தேன்.
கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை மீட்ட சம்பவம் அப்போது எங்கவீட்டுக்குப் பின்னாடி இருக்கிற கிணத்துல திடீர்னு சத்தம் கேட்டுச்சு. ஓடிப்போய் பார்த்தா எங்க வீட்டு பசுமாடு தங்கமீனா கிணத்துக்குல விழுந்து போராடிக்கிட்டு இருந்துச்சு. இதைப்பாத்ததுமே மாட்டக் காப்பாத நான் கிணத்துல குதிச்சேட்டேன்" என தழுதழுத்த குரலில் பேசிய அவருக்கு அதற்கு மேல் தொடர முடியவில்லை.
இதில், என்ன ஆச்சரியமான விஷயம் என்றால் புவனேஸ்வரிக்கு நீச்சல் தெரியாது என்பதுதான். தான் வளர்த்த மாட்டை தனது பிள்ளையப்போல் பாவித்ததனாலே துணிச்சலுடன் ஆழக்கிணற்றில் புவனேஸ்வரியால் குதிக்க முடிந்திருக்கிறது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு தனது வீட்டிலிருந்து ஓடி வந்த சுதா, தனது தம்பி மனைவியும், பசுமாடும் கிணற்றுக்குள் தத்தளிப்பதைக் கண்டு அவரும் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை மீட்க முயற்சி செய்த பெண்கள் அந்த நேரத்தில் என்பிள்ளை விழுந்திருச்சு காப்பாத்துங்கன்னு என் தம்பி பொண்டாட்டி கத்துனது கேட்டு நான் ஓடிவந்தேன். என் மருமகபிள்ளைதான் விழுந்து இருக்குன்னு நினைச்சேன். ஆனா, வந்து பாத்த நிலைமை இப்படி இருந்துச்சு. அதுக்கு பிறகு என் தம்பி, என் மகன் எல்லாம் ஓடிவந்து கிணத்துக்குள்ள குதிச்சு எங்கள ஒரு வழியா காப்பாத்திடாங்க. அதேநேரத்தில தீயணைப்புத் துறை வந்துட்டாங்க" என்று கண்களில் மிரட்சியுடன் கூறுகிறார் சுதா.
உசிலம்பட்டி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்பாக இவர்கள், பசுமாட்டை காப்பாற்ற பெரிதும் முயன்று இருக்கிறார்கள். அந்த முயற்சி தோல்வியில் முடியவே உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து 20 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தான் வளர்த்த மாட்டுடன் புவனேஸ்வரி இச்சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு அலுவலர் தங்கத்திடம் தொலைபேசியில் கேட்டபோது, "தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, கிணற்றுக்குள் சிக்கியிருந்த பசுமாட்டையும், அதனை காப்பாற்ற முயற்சித்த இரண்டு பெண்களையும் காப்பாற்றினோம். நாங்கள் அங்கு செல்லும்வரை பசுமாட்டை காப்பாற்ற இரு பெண்களும் துணிச்சலுடன் செயல்பட்டது பாராட்டுக்குரியது" என்றார்.
பின்விளைவு அறியாத இந்த உண்மையான பாசம்தான் இந்த மண்ணின் அழிக்கமுடியாத பாரம்பரியமாக தொன்றுதொட்டு வருகிறது. உயிர் என்று வந்து விட்டால் மனித உயிர் என்ன? மக்களின் உயிர் என்ன? இரண்டும் ஒன்றுதான்... இருந்தபோதும் துணிந்து செயலில் இறங்கிய முத்து புவனேஸ்வரியும் சுதாவும் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாத வீரமங்கைகள்தான்.
இதையும் படிங்க:யாசகம் பெற்ற பணத்தை 7 ஆவது முறையாக கரோனா நிவாரண நிதியாக வழங்கிய முதியவர்